×

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


தண்டனை விவரம்
* இந்திய தண்டனை சட்டம் 370(1) பிரிவில் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ5 ஆயிரம் அபராதம். கட்டத் தவறினால் 6 மாத சிறை.

* 370(3) பிரிவில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ25 ஆயிரம் அபராதம், கட்டத் தவறினால் ஒரு மாத சிறை.

* தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67 பிரிவில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ2 லட்சம் அபராதம், தவறினால் 6 மாத சிறை.

* ஒழுக்கக்கேடாக ஈடுபடுத்த முயற்சித்தல் 5(1)(ஏ) பிரிவில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ2 ஆயிரம் அபராதம், தவறினால் 3 மாத சிறை.

* இதே குற்றத்தின் 9வது பிரிவில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ10 ஆயிரம் அபராதம், தவறினால் 6 மாத சிறை.

* இந்த தண்டனையை நிர்மலாதேவி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி(52). அங்குள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு உதவி பேராசிரியையாக கடந்த 2018ல் பணியாற்றினார். துறைரீதியான வேலைக்காக அடிக்கடி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றுள்ளார். இதனால், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வித்துறையில் நிர்மலாதேவிக்கு நல்ல செல்வாக்கு இருந்துள்ளது. இவர் கல்லூரி மாணவிகளை தவறான செயல்களில் ஈடுபடுத்தும் நோக்கில், ஆசை வார்த்தைகளை கூறி சில மாணவிகளிடம் செல்போனில் பேசிய ஆடியோ கடந்த 13.3.2018ல் சமூக வலைத்தளங்களில் வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிகள் மற்றும் பெற்றோர் புகாரின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார், பேராசிரியை நிர்மலாதேவி மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், குற்றம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அருப்புக்கோட்டை போலீசார், நிர்மலாதேவியை 16.4.2018ல் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாயினர். இந்த வழக்கின் விசாரணை நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் 1,360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் விசாரணை தொடர்ந்து நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் ரகசிய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த ஏப்.26ல் தீர்ப்பளிப்பதாக நீதிபதி டி.பகவதியம்மாள் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து தீர்ப்பை நேற்று முன்தினத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்தார். மேலும், நிர்மலாதேவி இந்த வழக்கில் குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தார். அப்போது நிர்மலாதேவி தரப்பில் தண்டனையை எதிர்த்து வாதிட அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து தண்டனை விவரத்தை 30ம் தேதி (நேற்று) அறிவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலாதேவி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி.பகவதியம்மாள் முன்னிலையில் நிர்மலாதேவியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நிர்மலாதேவி வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் நிர்மலாதேவி தவறான நோக்கத்தில் எதையும் செய்யவில்லை. எனவே, அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.சந்திரசேகரன், ‘‘தான் செய்வது குற்றம் என்பதை தெரிந்தே தான் செய்துள்ளார். தனக்கு கீழ் படிக்க வந்த மாணவிகளை நம்பவைத்து தவறாக நோக்கத்தில் ஈடுபடுத்தும் வகையில் தான் ஈடுபட்டுள்ளார்.

திட்டமிட்டே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். எனவே, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து நிர்மலாதேவியின் தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி டி.பகவதியம்மாள், நிர்மலாதேவிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.2.42 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார். இதையடுத்து நிர்மலாதேவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு மதுரை பெண்கள் த்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலாதேவிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்பதால் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோரின் கூட்டம் அதிகம் இருந்தது.

கண்ணீர் சிந்திய நிர்மலா தேவி
மதுரை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவியை நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இயல்பான நிலையில் நிர்மலா தேவி இருந்தார். பின்னர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும், தண்டனை குறித்து நிர்மலாதேவி தரப்பு வக்கீல், நீதிபதி முன் ஆஜராகி வாதிட்டார். அப்போது குற்றவாளி கூண்டில் இருந்த நிர்மலாதேவி கண்ணீர் சிந்தியபடி இருந்தார்.

இருவர் விடுதலை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு
நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

The post மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nirmala Devi ,Villiputhur Women's Court ,Williputhur Women's Court ,Dinakaran ,
× RELATED குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்...